Monday, January 9, 2012

அன்புள்ள தோழிக்கு

அன்புள்ள தோழிக்கு,
நலம்… நிச்சயம் நீயும் நலமாக இருப்பாய் என நம்புகிறேன்… கடந்த இரண்டு வருடங்களாக நீ கடிதம் எழுது… கடிதம் எழுது என்கிறாய்… நானும் இதோ எழுதிவிட்டேன்… அதோ அனுப்பிவிட்டேன் என்று பொய்யால் வார்த்தைகளை நிரப்புகிறேன்…
நினைத்த நேரத்தில் உரையாட… நினைத்த நேரத்தில் உன்னை பார்க்க… கைபேசியும் இணையமும் கண்டத்தை சுருக்கி விட்ட போதிலும்… நீ கடிதம் எழுதுவதையே அதிகம் விரும்பினாய்… நானும் தான்…. ஏனோ தெரியவில்லை கடிதம் எழுதெலாம் என்று உட்காரும் போதெல்லாம்… எழுதாமல் தடுக்கும் என் சோம்பேறி தனத்திற்கு ஆயிரம் காரணங்கள் உடனே கிட்டிவிடுகின்றன…!
நட்புகாலத்தில் நாம் படித்த அறிவுமதியின் வரிகள் தான் என் நினைவுக்கு வருகின்றன…!
உனக்கு மடல் எழுத
உட்கார போது
மட்டும் தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்கு கிடைத்து
விடுகின்றன…!

- அறிவுமதி.

07.01.2012ல் பின் இரவில் ஒரு பிளாக் டீவுடன் உனக்கு கடிதம் எழுத உட்காருகிறேன்.. இந்த வரிகளின் தொடக்கதில் நான் 8ஆம் தேதியின் சில நிமிடங்களை கடக்கிறேன்…

பின் இரவில் எழுத உட்காருவது் பல வகைகளில் வசதியாக இருக்கிறது தோழி… மானிட பதர்களின் இடைவூருகள் இல்லாமல்… உறக்கமற்ற பின் இரவை கழிக்க… மற்றொரு டீ அருந்தவென… மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது தோழி…!
கடிதம் எழுதும் போது… நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என் தந்தைக்கு கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது… அதிகம் படிக்காத நகர வாழ்வோடு இன்னும் முழுதாக பொருந்தாத என் அம்மா சொல்ல சொல்ல, அப்பருவத்தில் என்னுடைய அதிக பட்ச தேவையான pencil box வாங்கி வர சொல்லி சென்னைக்கு அலுவல் வேலையாக சென்ற என் தந்தைக்கு கடிதம் எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது தோழி…!

இரு சக்கர வாகனத்திலும், மகிழுந்திலும் வாரத்திற்கு இரு முறையாவது இப்போது வந்து செல்லும் இச்சென்னை மாநகரம்… அந்நாட்களில் புதிரான ஒன்று…

பாப்பு(bappu)…(நான் தந்தையை அழைக்கும் வார்த்தை)… இங்க nightஆ இருந்த அங்கே(சென்னை) dayஆ இருக்குமா…! நிறைய படிச்சதான் அங்கே போக முடியுமா…? என என் தந்தையை கேள்விகளால் துளைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது தோழி…!

உனக்கு கடிதம் எழுத வந்து என் குழந்தை பருவ நினைவுகளால் நான் நினைகிறேனடி…!!!

கடந்த ஆண்டில் நான் கடந்தவற்றையும்… என்னை கடந்தவற்றையும்… ஒரு கடிதத்தில் வார்தைகளால் நிரப்பி விட முடியாதடி…!!!

நிச்சயம் 2011 என் நினைவுகளிலிருந்து மற்ற ஆண்டுகளை போல சுலபமாக அகலாது தோழி… கடந்த ஆண்டு எனக்கு தந்த படிப்பினைகள் அதிகம் தோழி… என் காதல், நான் நண்பர்களாக நினைத்த சில பேர்… வாழ்கையின் புதிர்களை சுலபாக சொல்லி கொடுத்துவிட்டார்கள தோழி…!

ஒரு விஷயத்தில் தோற்றால் இவ்வுலகம் நம்மை எப்படி பார்க்கும் என்று கூட சென்ற வருடம் சொல்லிக் கொடுத்து விட்டது என் அருமை தோழி…!!!

இயற்கையின் பேராற்றலின் துணையினால் இதனை கடக்கவும் முடிந்தடீ…!!!

நாங்கள் பிரிந்தது குறித்து கூட அதிகம் வருத்தமில்லை… சொல்ல போனால் சந்தோஷமே மிகுதியாக இருக்கிறது… இப்போது அதிகம் பொய் சொல்ல வேண்டிய தேவை இருப்பதில்லை… அதிகம் பயணம் செய்ய முடிகிறது… அவளுடைய தேவையற்ற சந்தேகங்களை நான் சுமக்க வேண்டியதில்லை… அதிகம படிக்க முடிகிறது… என் இலக்கை நோக்கி தெளிவான திட்டமிடலுடன் செல்ல முடிகிறது… நிச்சயம் பிரிவினால வருத்தம் இல்லை தோழி…!!!

ஒரே ஒரு வருத்தம் தான் கடைசி வரை அவள் நம் நட்பினை உணரவும் இல்லை…. நட்பு மட்டும் தான் என்று நம்பவும் இல்லை…!!!

எப்போதும் என் சோகங்களை நானே கிண்டலும், கேலியுமாக கடந்து விடுவேன்… அது உனக்கும் தெரியும்… ஆனால் சென்ற ஆண்டின் சில நினைவுகளை அப்படி கடக்க முடியவில்லை தோழி…!!!

என் வயதொத்த நண்பர்களும் எனக்கு மிகவும் சொற்பம்… முப்பதை கடந்த என் அதிகமான நண்பர்களால் என் சோகங்கள் தவறாகவே புரிந்துக் கொள்ளப்பட்டன…!!!

சோகங்கள் மட்டும் அல்ல கடந்த ஆண்டு தந்த மகிழ்வான தருணங்களும் அதிகம்…!

முக்கியமாக பாலை திரைப்படம்… என் சொந்த பிரச்சனைகளால் என்னால் பாலை யின் தயாரிப்பில் பங்கு கொள்ள இயலவில்லை… பின் தயாரிப்பு பணிகளிலேயே பங்கு கொண்டேன்… அது தந்த ஆத்ம நிறைவை வார்தைகளால் விவரிக்க முடியாது என் அன்பு தோழி…

தன் மானத்தை அடகு வைத்து தான் படம் பண்ண முடியும் என்ற என் கற்பிதங்களால் தான் என் சினிமா ஆசையை தள்ளி வைத்தேன்… தன் மானத்துடனும், வளைந்துக் கொடுக்கமலும் படம் பண்ண முடியும் என எனக்கு செந்தமிழனின் பாலை உணர்த்தியது தோழி…!

பாலை மாற்று திரைப்படம் அல்ல… ஒரு நல்ல மாற்றத்திற்கான படம் தோழி…!

வாகை சூட வா, மெளன குரு என இந்த ஆண்டு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த படங்களும் வந்தது தோழி…!!!

மெளனகுருவில்… ”கருப்ப இருகிறவன்னா நீங்க சுலபமா அடிச்சிருவீங்களா…?, இங்க இருந்து எல்லாத்துகிட்டையும் கேட்டுகிட்டு…, அனுமதி வாங்கிட்டு போறது ரொம்ப ரொம்ப கஷ்டம்… யாருக்கும் தெரியாமா தப்பிச்சு போறது கொஞ்சம் கஷ்டம்.. (மனநலக்காப்பகத்தில் இருந்து தப்பி செல்ல திட்டமிடும் போது வரும் உரையாடல்) ஆகிய வசனங்கள் என்னை மிகவும் சந்தோஷ படுத்தியது தோழி…!!!

தமிழ் சினிமா நல்ல பாதையில் தான் செல்கிறது தோழி…!!!

அப்பாதுரையார் குமரிகண்டம், ம.சோ. விக்டர் தமிழர் சமயம், இஸ்லாம் தமிழர் சமயம், குமரி கண்டம், chetan bhagath revolution 2020, சாண்டில்யன் கடல் புறா, ஓசோ ஞானத்திற்கு ஏழு படிகள், காமத்திலிருந்து கடவுளுக்கு, அலைக்சாண்டர் காண்டிராவின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும்,கலீல் ஜிப்ரானின் ஞானிகளின் தோட்டம், சீனா கம்யூனிஸ்ட் முதலாளி, பாரதி புத்தகலாயத்தின் வீட்டுக்கொரு மருத்துவர் ஆகியவை இவ்வாண்டு நான் படித்த புத்தகளில் நினைவுக்கு வருவது தோழி…!

தோழி… நிச்சயம் நீ வீட்டுக்கொரு மருத்துவர் படிக்க வேண்டும் தோழி…!
மருத்திவத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை மறு மதிப்பீடு செய்ய தூண்டுகிறது இந்நூல் தோழி…!

உன்னிடம் பகிர்ந்து கொள்ள மற்றொரு மகிழ்வான விஷயம் இருக்கிறது தோழி…!!! எங்களின் அடுத்த படத்திற்கான பணி தொடங்கியாகி விட்டது… தலைப்பு கடம்பர்கள் தோழி…!!!

சரி தோழி எனக்கு தூக்கம் வருகிறது இன்னொரு பிளாக் டீயின் துணையுடன் தூக்கதை தள்ளி போட விரும்ப வில்லை… மற்றொரு இனிமையான நிகழ்வில் சந்திப்போம்…

அனைவரும் இன்புற்றிருக்க இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன்…!!!


-மு. நியாஸ் அகமது.