Monday, January 9, 2012

அன்புள்ள தோழிக்கு

அன்புள்ள தோழிக்கு,
நலம்… நிச்சயம் நீயும் நலமாக இருப்பாய் என நம்புகிறேன்… கடந்த இரண்டு வருடங்களாக நீ கடிதம் எழுது… கடிதம் எழுது என்கிறாய்… நானும் இதோ எழுதிவிட்டேன்… அதோ அனுப்பிவிட்டேன் என்று பொய்யால் வார்த்தைகளை நிரப்புகிறேன்…
நினைத்த நேரத்தில் உரையாட… நினைத்த நேரத்தில் உன்னை பார்க்க… கைபேசியும் இணையமும் கண்டத்தை சுருக்கி விட்ட போதிலும்… நீ கடிதம் எழுதுவதையே அதிகம் விரும்பினாய்… நானும் தான்…. ஏனோ தெரியவில்லை கடிதம் எழுதெலாம் என்று உட்காரும் போதெல்லாம்… எழுதாமல் தடுக்கும் என் சோம்பேறி தனத்திற்கு ஆயிரம் காரணங்கள் உடனே கிட்டிவிடுகின்றன…!
நட்புகாலத்தில் நாம் படித்த அறிவுமதியின் வரிகள் தான் என் நினைவுக்கு வருகின்றன…!
உனக்கு மடல் எழுத
உட்கார போது
மட்டும் தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்கு கிடைத்து
விடுகின்றன…!

- அறிவுமதி.

07.01.2012ல் பின் இரவில் ஒரு பிளாக் டீவுடன் உனக்கு கடிதம் எழுத உட்காருகிறேன்.. இந்த வரிகளின் தொடக்கதில் நான் 8ஆம் தேதியின் சில நிமிடங்களை கடக்கிறேன்…

பின் இரவில் எழுத உட்காருவது் பல வகைகளில் வசதியாக இருக்கிறது தோழி… மானிட பதர்களின் இடைவூருகள் இல்லாமல்… உறக்கமற்ற பின் இரவை கழிக்க… மற்றொரு டீ அருந்தவென… மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது தோழி…!
கடிதம் எழுதும் போது… நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என் தந்தைக்கு கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது… அதிகம் படிக்காத நகர வாழ்வோடு இன்னும் முழுதாக பொருந்தாத என் அம்மா சொல்ல சொல்ல, அப்பருவத்தில் என்னுடைய அதிக பட்ச தேவையான pencil box வாங்கி வர சொல்லி சென்னைக்கு அலுவல் வேலையாக சென்ற என் தந்தைக்கு கடிதம் எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது தோழி…!

இரு சக்கர வாகனத்திலும், மகிழுந்திலும் வாரத்திற்கு இரு முறையாவது இப்போது வந்து செல்லும் இச்சென்னை மாநகரம்… அந்நாட்களில் புதிரான ஒன்று…

பாப்பு(bappu)…(நான் தந்தையை அழைக்கும் வார்த்தை)… இங்க nightஆ இருந்த அங்கே(சென்னை) dayஆ இருக்குமா…! நிறைய படிச்சதான் அங்கே போக முடியுமா…? என என் தந்தையை கேள்விகளால் துளைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது தோழி…!

உனக்கு கடிதம் எழுத வந்து என் குழந்தை பருவ நினைவுகளால் நான் நினைகிறேனடி…!!!

கடந்த ஆண்டில் நான் கடந்தவற்றையும்… என்னை கடந்தவற்றையும்… ஒரு கடிதத்தில் வார்தைகளால் நிரப்பி விட முடியாதடி…!!!

நிச்சயம் 2011 என் நினைவுகளிலிருந்து மற்ற ஆண்டுகளை போல சுலபமாக அகலாது தோழி… கடந்த ஆண்டு எனக்கு தந்த படிப்பினைகள் அதிகம் தோழி… என் காதல், நான் நண்பர்களாக நினைத்த சில பேர்… வாழ்கையின் புதிர்களை சுலபாக சொல்லி கொடுத்துவிட்டார்கள தோழி…!

ஒரு விஷயத்தில் தோற்றால் இவ்வுலகம் நம்மை எப்படி பார்க்கும் என்று கூட சென்ற வருடம் சொல்லிக் கொடுத்து விட்டது என் அருமை தோழி…!!!

இயற்கையின் பேராற்றலின் துணையினால் இதனை கடக்கவும் முடிந்தடீ…!!!

நாங்கள் பிரிந்தது குறித்து கூட அதிகம் வருத்தமில்லை… சொல்ல போனால் சந்தோஷமே மிகுதியாக இருக்கிறது… இப்போது அதிகம் பொய் சொல்ல வேண்டிய தேவை இருப்பதில்லை… அதிகம் பயணம் செய்ய முடிகிறது… அவளுடைய தேவையற்ற சந்தேகங்களை நான் சுமக்க வேண்டியதில்லை… அதிகம படிக்க முடிகிறது… என் இலக்கை நோக்கி தெளிவான திட்டமிடலுடன் செல்ல முடிகிறது… நிச்சயம் பிரிவினால வருத்தம் இல்லை தோழி…!!!

ஒரே ஒரு வருத்தம் தான் கடைசி வரை அவள் நம் நட்பினை உணரவும் இல்லை…. நட்பு மட்டும் தான் என்று நம்பவும் இல்லை…!!!

எப்போதும் என் சோகங்களை நானே கிண்டலும், கேலியுமாக கடந்து விடுவேன்… அது உனக்கும் தெரியும்… ஆனால் சென்ற ஆண்டின் சில நினைவுகளை அப்படி கடக்க முடியவில்லை தோழி…!!!

என் வயதொத்த நண்பர்களும் எனக்கு மிகவும் சொற்பம்… முப்பதை கடந்த என் அதிகமான நண்பர்களால் என் சோகங்கள் தவறாகவே புரிந்துக் கொள்ளப்பட்டன…!!!

சோகங்கள் மட்டும் அல்ல கடந்த ஆண்டு தந்த மகிழ்வான தருணங்களும் அதிகம்…!

முக்கியமாக பாலை திரைப்படம்… என் சொந்த பிரச்சனைகளால் என்னால் பாலை யின் தயாரிப்பில் பங்கு கொள்ள இயலவில்லை… பின் தயாரிப்பு பணிகளிலேயே பங்கு கொண்டேன்… அது தந்த ஆத்ம நிறைவை வார்தைகளால் விவரிக்க முடியாது என் அன்பு தோழி…

தன் மானத்தை அடகு வைத்து தான் படம் பண்ண முடியும் என்ற என் கற்பிதங்களால் தான் என் சினிமா ஆசையை தள்ளி வைத்தேன்… தன் மானத்துடனும், வளைந்துக் கொடுக்கமலும் படம் பண்ண முடியும் என எனக்கு செந்தமிழனின் பாலை உணர்த்தியது தோழி…!

பாலை மாற்று திரைப்படம் அல்ல… ஒரு நல்ல மாற்றத்திற்கான படம் தோழி…!

வாகை சூட வா, மெளன குரு என இந்த ஆண்டு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த படங்களும் வந்தது தோழி…!!!

மெளனகுருவில்… ”கருப்ப இருகிறவன்னா நீங்க சுலபமா அடிச்சிருவீங்களா…?, இங்க இருந்து எல்லாத்துகிட்டையும் கேட்டுகிட்டு…, அனுமதி வாங்கிட்டு போறது ரொம்ப ரொம்ப கஷ்டம்… யாருக்கும் தெரியாமா தப்பிச்சு போறது கொஞ்சம் கஷ்டம்.. (மனநலக்காப்பகத்தில் இருந்து தப்பி செல்ல திட்டமிடும் போது வரும் உரையாடல்) ஆகிய வசனங்கள் என்னை மிகவும் சந்தோஷ படுத்தியது தோழி…!!!

தமிழ் சினிமா நல்ல பாதையில் தான் செல்கிறது தோழி…!!!

அப்பாதுரையார் குமரிகண்டம், ம.சோ. விக்டர் தமிழர் சமயம், இஸ்லாம் தமிழர் சமயம், குமரி கண்டம், chetan bhagath revolution 2020, சாண்டில்யன் கடல் புறா, ஓசோ ஞானத்திற்கு ஏழு படிகள், காமத்திலிருந்து கடவுளுக்கு, அலைக்சாண்டர் காண்டிராவின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும்,கலீல் ஜிப்ரானின் ஞானிகளின் தோட்டம், சீனா கம்யூனிஸ்ட் முதலாளி, பாரதி புத்தகலாயத்தின் வீட்டுக்கொரு மருத்துவர் ஆகியவை இவ்வாண்டு நான் படித்த புத்தகளில் நினைவுக்கு வருவது தோழி…!

தோழி… நிச்சயம் நீ வீட்டுக்கொரு மருத்துவர் படிக்க வேண்டும் தோழி…!
மருத்திவத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை மறு மதிப்பீடு செய்ய தூண்டுகிறது இந்நூல் தோழி…!

உன்னிடம் பகிர்ந்து கொள்ள மற்றொரு மகிழ்வான விஷயம் இருக்கிறது தோழி…!!! எங்களின் அடுத்த படத்திற்கான பணி தொடங்கியாகி விட்டது… தலைப்பு கடம்பர்கள் தோழி…!!!

சரி தோழி எனக்கு தூக்கம் வருகிறது இன்னொரு பிளாக் டீயின் துணையுடன் தூக்கதை தள்ளி போட விரும்ப வில்லை… மற்றொரு இனிமையான நிகழ்வில் சந்திப்போம்…

அனைவரும் இன்புற்றிருக்க இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன்…!!!


-மு. நியாஸ் அகமது.

Tuesday, March 30, 2010

“ அங்காடி தெரு ” திரைப்படமும், நமது கடமையும்...!

வழக்கமானதொரு மாலைப் பொழுதில் அங்காடி தெரு திரைப்படத்திற்கு நண்பர் அழைத்த போது, திரைப்படத்தின் இயக்குனரான வசந்த பாலனுடைய முந்தைய படமான “வெயில்” பார்த்துவிட்டு தொலைபேசியில் அவருடன் தர்க்கம் செய்தது நினைவுக்கு வந்தது.( எங்க அப்பா தேவர் இனத்துக்கே உரிய வீரமும், கோபமும் உள்ளவர், வெயில் படத்தின் ஆரம்ப காட்சியில் உள்ள இந்த வசனத்திற்காக தான் அவருடன் வாதம் செய்தேன்).

படத்தின் மீது பெரிதாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்கு வழக்கமான கால் மணி நேர கால தாமதத்துடன் சென்றேன். ஆனால் திரையரங்கிற்குள் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே அதில் கூறப்பட்டுள்ள அரசியல் என் பொட்டில் அடித்தாற் போல் இருந்தது.

கதையின் களம், சென்னை தி.நகரில் உள்ள அங்காடி தெரு(ரெங்கநாதன் தெரு)…

“எடுத்துக்கோ... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ...” என்று நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து கூவி அழைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடையில் தான் கதையின் நாயகனும், நாயகியும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், பெண்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் வசந்தபாலன் காட்சி மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

சரவணா ஸ்டோர்ஸ், போதீஸ் ஆகிய கடைகளில் (திரைப்படத்தில் முருகன் ஸ்டோர்ஸ்) வேலை பார்க்கும் ஊழியர்கள் கோழி பண்ணைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளை போல் அறைகளில் அடைக்கப்பட்டிருகிறார்கள்.

காதல் பூ போன்றது, புழு போன்றது என்று பேத்தும் நகர மனிதர்களின் காதல்களை மட்டும் பதிவு செய்யும் திரைப்படங்கள் மத்தியில்… இந்த படம் சராசரி பெரும்பான்மை மனிதர்களின் காதலை பதிவு செய்கிறது.

அவர்களின் அழுகை சத்தம் நகர பேரிரைச்சலில் கரைந்துப் போகிறது. அவர்களின் காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது, அவர்களின் உணர்வுகள் உதாசீனப்படுத்தப்படுகிறது.

நிச்சயம் இந்த படம் புனைவு அல்ல… நிஜம்…

சரவணா ஸ்டோர்ஸிலும், ஆயிரம் ஊழியர்கள் உங்களை வரவேற்பார்கள் என்று பெருமை அடிக்கும் போத்தீஸ் போன்ற் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் இதை விட உருக்கமான ஆயிரம் கதைகளை கேட்கலாம்.

முதலாளிகள், தம் ஊழியர்களை சக மனிதனாக பார்க்க மறுக்கிறார்கள், சக மனிதனாக பார்க்கவும் விரும்புவதில்லை. அவர்களை பொறுத்த வரை ஊழியர்கள் இயந்திரத்தை போன்றவர்கள்.

வழக்கமாக படங்களை அழுதும், சிரித்தும் பார்த்து விட்டு, வீடுகளுக்கு சென்றவுடன் படத்தின் நினைவுகளை துடைத்தெறிந்துவிட்டு நம் அன்றாட வேலைகளில் மூழ்கிபோவது போல் இந்த படத்தையும் கடந்து செல்ல வேண்டாம்.

இந்த படம் தொடர்பாக நமக்கென்று ஒரு முக்கிய கடமை இருக்கிறது...

இந்த ஊழியர்களின் அவலங்களுக்கு... நாமும் ஒரு காரணம்...

நம் மனதின் ஓரத்தில் எங்காவது கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கொடிருந்தால்... இனி சென்னை சில்க்ஸ், போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெருங் கடைகளில் எதுவும் வாங்க மாட்டோம் என்றொரு முடிவெடுப்போம்...


“நீங்கள் செருப்பை பார்கையில்
அணிந்திருப்பவனின் காலை பார்கிறீர்கள்
நான்
செய்தவனின் கையை பார்கிறேன்”

- காசி. ஆனந்தன்.

பி.கு :

இந்த படத்தின் ஒரு கூறை மட்டும் தான் இந்த கட்டுரை பேசுகிறது. அதையும் கடந்து படத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது. கண்டிப்பாக திரைப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்கவும்.

Friday, March 5, 2010

நான்… உன் ஆண் குறி பேசுகிறேன்...!!!

நான் உன் ஆண் குறி பேசுகிறேன்...!
ஆம்... அதிர்ச்சி அடையாதே... சத்யமாக நான் தான் பேசுகிறேன்... நீ உன் மனதோடு பேசி பல நாட்களாக தூக்கமின்றி கஷ்படுவதை நானறிவேன்... நிச்சயமாக நீ பேச வேண்டியது உன் மனதோடல்ல... என்னுடன் தான்... உன் பிரச்சனைக்கு நானே காரணக்கர்த்தா... ஆதலால் உன் பிரச்சனையை தீர்க்க வேண்டியதும் நான் தான்...!

முகம் சுழிக்காதே...!
உன் பிரச்சனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று ஐயம் கொள்ளாதே...!
ஐயமின்றி நம்பு... உன் பிரச்சனைக்கு நானே முழுமுதற் காரணம்...
நீ நம்ப மறுக்கலாம்... அல்லது இத்தனை நாட்களாக நீ புனிதம் பூசிய உன் காதலை நான் கொச்சைப்படுத்தி விட்டதாக என் மீது பெருங்கோபம் கொள்ளலாம்...!

உனக்கு விருப்பமில்லை என்பதற்காக... எதார்த்தம் எங்கும் ஒளிந்துக் கொள்ள போவதில்லை... எதார்த்தை சந்திக்க நீதான் அஞ்சுகிறாய்,,, நீதான் ஒளிந்துக்கொள்கிறாய்...!

நீ ஒரு பெண்ணை காதலித்தாய்... அவளும் உன்னைக் காதலித்தால்...
ஆனால் அவள் வெறொறுவனுடன் திருமணம் ஆகி சென்றுவிட்டால்... இது தானே உன் பிரச்சனையென்று நீ நம்புவது...?

காதல் என்ற சொல்லுக்கு நீ நம்பும் அர்த்தம் என்ன...? மறைவின்றிக் கூறு...

கட்டிளமை பருவத்தில் ஒருவர் மீது மற்றொருவருக்கு வரும் ஈர்ப்பை காதல் என்று நீ எண்ணுகிறாய்... நிச்சயம் அது காதல் இல்லை... அது பருவ மாற்றம்....!
நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்தே தீரும்...!

நீ விரும்பிய பெண் மற்றொருவருடன் நிச்சயம் செய்யப்பட்டபோது... முகத்தில் திராவகம் வீச துணிந்தையும் நான் அறிவேன்...! பின்பு அந்த முடிவைக் கைவிட்டு மதுக் கோப்பையில் நீ முழ்கியதையும் நான் அறிவேன்...!

இந்த முட்டாள்தனத்திற்கு நீ மட்டுமே முழுபொறுப்பென்று குற்றம் சுமத்த மாட்டேன்...!
நீ வாழும் சமூகம், காதலென்பது வாழ்வில் ஒரு முறை மட்டுமே வருமென்று பொய்யுரைக்கிறது... love is divine என்று காதலுக்கு புனித முழாம் பூசுகிறது,,,
தயவு செய்து இவற்றை நம்பாதே...! நீ இவற்றை நம்பியதால் தான்... ஒருமுறை தற்கொலை செய்யக் கூட துணிந்தாய்...!

காதல் என்ற பெயரால் உன்னை ஏமாற்றி உன்னிடம் பலப் பொருட்களை விற்க, உன்னை சுற்றி ஒரு வணிக கூட்டம் உலவுகின்றது... அவற்றின் சூழ்ச்சியே இவையனைத்தும்...!

நான் உளறுவதாய் நினைக்காதே...!

நிச்சயமாக காதல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும், ஒன்றுக்கு மேற்பட்டோருடனும் வரும்....! நீ எந்த காதலை தேர்ந்தெடுகிறாய் என்பதே உன் முன் உள்ள சவால்...
நீ எனக்கு விரைவில் உணவு படைக்க வேண்டும் என்ற அவசரத்தில் உன் காதலை தீர்மானிக்காதே... உன் அறிவின் பேச்சைக் கேள்...!
உனக்கு பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடு...!

மன்னித்துக்கொள்... காதலை என்னுடன் மட்டும் தொடர்புபடுத்தி பேசுவதற்காக... உன் காதல்களுக்கு நான் மட்டும் காரணமல்ல... ஆனால் உன் காதல்களில் நான் முக்கிய பங்கு வகிக்கிறேன்...!

ஒரு சின்ன வேண்டுகோள்... இது என்னுடயதல்ல... உன் செவிவுடைய வேண்டுகோள்... நீ கடந்த சில நாட்களாக... உன்னுடைய i pod ல் சோக பாடல்களாக பதிவேற்றம் செய்து அதை இம்சிக்கிறாயாமே...! தயவு செய்து பாடல்களை மாற்ற வேண்டுமாம்....!

Thursday, March 4, 2010

தயவு கூர்ந்து தள்ளி நில்... உன் மீது இரத்த வாடை அடிக்கிறது...!

நண்பா...! தயவு செய்து என் அருகே வராதே... என் மீது இரத்த வாடை அடிக்கிறது...
நீ முகம் சுழிக்கும் முன் நானே சொல்லிவிட்டேன்... தள்ளியே நில்...!

காரணங்கள் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதே... என் காரணங்கள் உனக்கு புரிய போவதில்லை, நீ அதை புரிந்து கொள்வதையும் விரும்புவதில்லை...
ஏனெனில் உன் மீதும் அதே இரத்த வாடை அடிக்கிறது...

நண்பா... எனக்கு மனம் பேதலித்துவிட்டது என்று நம் அறை நண்பர்களிடம் நீ சொன்னாதாக ஒரு தகவல் வந்தது... உண்மையா நண்பா...? என் மீது உள்ள அக்கறையில் என் வீட்டிற்கும் மின்னஞ்சல் அனுப்பினாயாமே...? என் நடவடிக்கை சரியில்லை என்று...!

அன்று நம் இருவருக்குமான விடுப்பு நாளில்... ஒரு உயர்தர காப்பி ஷாப்பிற்கு என்னை அழைத்து சென்றாய்... எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... உன் டி-சர்ட்டில் சேகுவேரா படம் பதிந்திருந்தது...

அன்று உன் ஆங்கிலத்தில் நீ ஏதேதோ சொன்னாய்...!
அதன் சாரம் எனக்கு மனநிலை சரியில்லை என்பதும்... நான் நல்ல மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதும்...! உன் ஆலோசனைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியாகத் தான் என்னிடம் கேட்டாய்... என் பிரச்சனை என்னவென்று...?

“சத்தியமாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நண்பா...! உனக்கு எது என்னிடம் தவறாக தெரிந்தது...? அன்று நம் அறையில் இருந்த அனைத்து levis, gap டி-சர்டையும், nike, reebok சூவையும் தீயிட்டு கொளுத்தியதா...?” என்றேன்.

நீ, ‘ஆம்’ என்றாய்...!

“நண்பா...! இந்த பொருட்களை தயாரிக்கும் ஆலைகளில் வேலை செய்வோருக்கான ஊதியம் நாளொன்றுக்கு 60 ரூபாய் மட்டும் தான்... இந்த பொருட்களை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள் 10 x 10 அளவுக் கொண்ட அறையில் குறைந்தது 10 பேர் தங்குகிறார்கள் நண்பா... அங்கு வேலை செய்யும் பெண்கள் மாத விடாய் காலத்தில் napkin வாங்குவதுகூட அவர்களுக்கு ஆடம்பரச் செலவு நண்பா...! இந்த நிறுவனங்கள் அவர்களுக்கான ஆலைகளை, அவர்களுடைய நாட்டில் நிறுவுவது இல்லை... அவர்கள் மூன்றாம் உலக நாடுகளிலேயே ஆலைகளை நிறுவுகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்... வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் நண்பா... அவர்கள் வாழும் வாழ்கையை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது...
தொழிலாளர்கள் மட்டும் சுரண்டப்படவில்லை நண்பா... இந்த நிறுவனஙகளுக்காக பொருட்களை தயாரிக்கும் ஆலைகளின் அதிபர்களும் சுரண்டப்படுகிறார்கள்... குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து தரும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள் நண்பா... நம்முடைய நீர்நிலைகள் மாசடைகிறது...!

நம் ஆலை ஊழியர்களின், ஆலை அதிபர்களின், இயற்கை அன்னையின் இரத்தத்தை உறிஞ்சி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது நண்பா... அதில் இரத்த வாடை அடிகிறது
அதனால் தான் அதனை கொளுத்தினேன்... நீயும் இனி அந்த பொருட்களை வாங்காதே... அணியாதே நண்பா...!” என்றேன்.

நீ மெளனம் காத்தாய்... சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் கிளம்பினோம்...

அத்யாவசிய தேவை என்று நீ நினைத்து வங்கியில் கடன்பெற்று நீ வாங்கிய உன்னுடைய கார், நம் இருவரை மட்டும் சுமந்துச் சென்றது...

நண்பா...! இது நம் mansion செல்லும் வழியில்லையே... நாம் எங்கு செல்கிறோம் என்று வினவினேன்.

நீ பதிலேதும் கூறவில்லை...
சில கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு ஒரு புகழ் பெற்ற மனநல மருத்துவரின் கிளினிக்கில் காரை நிறுத்தினாய்...

தெளிவாக எனக்கு எல்லாம் புரிகிறது நண்பா...!
ஆனால் உனக்குதான் நான் முன்பே கூறியது போல் எதுவும் புரிவதில்லை. புரிந்துக் கொள்வதையும் நீ விரும்புவதில்லை...!

இறுதியாக உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள் நண்பா...! தயவுசெய்து இனி சேவின் படம் போட்ட டி-சர்டை நீ எப்போதும் அணியாதே...!

எனக்கு இந்த மனநல மருத்துவர் மீது இரத்த வாடை அடிக்கிறது...!

Wednesday, March 3, 2010

இறைவா...! தயவு செய்து நீ நரகத்திற்கு சென்றுவிடு...!!!

என் அன்பு அன்னையே...
தீர்ப்பு நாள் என்றாய், கியாமத் நாள் என்றாய், judgment day என்றாய், நாம் கண்காணிக்கப்படுகிறோம்... நாம் செய்யும் தண்டனைகளுக்கு நிச்சயம் மறுமையில் தண்டனை உண்டு என்றாய்...

ஆம். அம்மா. நானும் உணர்ந்தேன்...
தேர்வறையில் கள்ளத்தனமாக நண்பணின் விடைத்தாளை காணும் போதும், வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்ற போதும், அடுப்பறை அஞ்சரப்பெட்டியிலிருந்து திருட்டுத்தனமாக சில்லரைகளை களவாடிய போதும்... நிச்சயமாக உணர்ந்தேன் நான் கண்காணிக்கப்படுவதை...

எப்போதும்... நான் செளகரியமாக உணர்ந்ததில்லை... தொடர்ந்து கண்காணிக்கப்படுகிற அவஸ்தையை நீ என்றுமே உணர்ந்ததில்லையா....?

குஜராத் பெஸ்ட் பேக்கரியில்... உயிரோட பலரை எரித்தப்போது.... முதன் முதலாக உன்னிடம் கேட்டேன்.... ஏன் அம்மா... இப்போது இறைவன்... கண்காணித்துக்கொண்டு இருக்கிறானா...? என்று.

ஆம் என்றாய். தீர்ப்பு நாளில் நிச்சயம் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும் என்றாய்.

நான் சமாதானமடைந்தேன்.

பிறகொரு நாள்.... குண்டு வெடிப்பில் 30 பேர் மொத்தமாக இறந்தாக செய்தி தாளில் படித்தேன்...

நீ இதற்கும் அவன் காண்காணித்துக்கொண்டு இருக்கிறான் என்றாய்...!

ஈழத்தில் மொத்தாக 20,000 பேர்... ஒரு நாளில் கொல்லப்பட்ட போது... உன்னிடம் கொஞ்சம் அதட்டலாகவே கேட்டேன்...

ஏன் அம்மா... இப்போதும் இறைவன் கண்காணித்துக்கொண்டு மட்டும் தான் இருக்கிறானா? ஏன் காப்பதற்கு வர மாட்டேன் என்கிறான்?

”நீ... இப்படியெல்லாம் பேசாதே.... தீர்ப்பு நாளில் அவனுக்கு நீயும் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்” என்றாய்.

சத்தியமாக என்னால் இப்போது சமாதானம் அடையமுடியவில்லை அம்மா...

நிச்சயமாக அம்மா... தீர்ப்பு நாளில்... உன் இறைவன் தீர்ப்பு அளிக்கும் இடத்தில் இருக்கமாட்டான்...!!!
நீ தான் அம்மா... என் சிறு வயதில் சொன்னாய்... குற்றம் புரிதலை விட அந்த குற்றத்தை கண்டும் காணாமல் இருத்தல் பாவம் என்று...!

என் சகோதரி கற்பழிக்கப்படுவதையும்... என் சகோதரன் கொல்லப்படுவதையும்... எம்மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுவதையும்... எம் குழந்தைகள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இறக்க நேர்ந்த்ததையும்... எப்படி அம்மா உன் இறைவனால் கண்காணித்துக்கொண்டு மட்டும் இருக்க முடிந்தது...!

அம்மா.. கள்ள மெளனம் சாதிக்காதே... தெளிவாக கூறு...தண்டிக்கப்பட வேண்டியது யாரென்று? ஏனெனில் நான் என் குழந்தையிடம் சொல்ல வேண்டும்... அவன் கண்காணிக்கப்படுகிறானா என்று?

அம்மா... உன் இறைவனை வேண்டுகிறேன்...
தயவு செய்து... தீர்ப்பு நாளில் என்னை மீண்டும் உயிர்பிக்க வேண்டாம்...
எனக்கு உன் இறைவனைப் பார்க்க அருவருப்பாக இருக்கும்...!
அவனுக்குள் மனிதம் இருந்தால் அவன் என்னை பார்க்க வெட்க்கப்பட்டாலும் படலாம்...

அம்மா... ஒரு வேளை தீர்ப்பு நாளில் நீ அவனை சந்தித்தால்...
வழி மாறாமல் நரகத்திற்கு செல்லும்படி அவனிடம் சொல்லிவிடு...!
அவனால் அது இயலவில்லையென்றால்...

இனி... இந்த கண்காணித்தலாவது வேண்டாம் என்று சொல்லிவிடு...!!!

Sunday, February 28, 2010

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...!!!

எனக்கு வேற வழி தெரியலைங்க.... இந்த அரசாங்க செயல்பாடுகளை பார்த்த பிறகு, எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல.... அரசு உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு தர தயாரா இருக்கு.... ஒண்ணு அரசுக்கு எந்த தொந்தரவும் தராமா... நீங்களே பெருந்தன்மையா தற்கொலை பண்ணிக்கணும் இல்லைன்னா அரசு வந்து கொல்லும்... அப்ப வந்து குய்யோ முய்யோன்னு கூப்பாடு போடக்கூடாது....!!!

GDP 9% வளர்ச்சியை நோக்கி போயிட்டு இருக்குங்கிறான், கம்யூனிஸ்ட்காரங்க, தோழர்... விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்னைக்கு தொட்ர்வண்டி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் இருக்கு... மறக்காம் குடும்பத்தோட வந்துருங்கன்னு... ஏதோ கல்யாணத்துக்கு கூப்பிடற மாதிரி SMS அனுப்புறாங்க...

பணவீக்கம் அதிகரிச்சுறுச்சுன்னு சொல்றாங்க.... அய்யா.... சாமி சத்தியமா... சுத்தமா ஏதும் புரியலைங்கய்யா... எனக்கு ஏதாவது வீக்கம்னா எங்க அப்புச்சிகிட்ட சொல்வேன்... அது எனக்கு பத்து போட்டுவுடம்... பணவீக்கத்துக்கு என்னப் பண்ணுறதுனு அதுக்கும் தெரியலையாம்...

சரி அந்த கருமத்தை விடுங்கய்யா... நாம விசயத்துக்கு வருவோம்...

பட்ஜெட்ல முகர்ஜி அய்யா... உரம் விலை உயராதுன்னு சொல்லி இருக்கீங்க.... ஆனா உர நிறுவனமே உரங்களின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாங்கிறீங்க... சூது வாகு தெரியாதா புள்ளைய்யா உங்களை வளர்த்துட்டாங்களே முகர்ஜி அய்யா... உர கம்பெனிக்காரங்க அம்புட்டு பேரும் கயவாளி பயலுவோ... நிச்சயமா உரவிலையை ஏத்திப்புடுவாங்கய்யா...

ஏற்கனவே எங்க விவசாயிங்க அரிசியை உற்பத்தி பண்ணி வெளியில வித்துட்டு ஒரு ரூபாய் அரிசி தின்னுகிட்டு இருக்கான்...

அப்புறம் இன்னொரு விசயம்... நீங்க ஏதோ சட்டம் நிறைவேற்ற போறீங்களாமே... மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்களை யாரு எதிர்த்தாலும் அவுங்களை 6 மாசம் முதல் ஒரு வருசம் வரை உள்ள வச்சு அழகுப் பார்க்க போறீங்களாமே...

இங்க என்னத் தான்ய்யா நடக்குது....
ஏற்கெனவே விவசாயிங்க மரபணு மாற்றப்பட்ட பருத்தியை போட்டுட்டு தற்கொலை பண்ணிட்டாங்க... இப்ப கத்திரி, தக்காளி, வெண்டை... சரிங்க... பி,டின்னா என்னய்யா... ஒரு பொருளோட தன்மையை இன்னொன்னுல செலுத்தி... அந்த பொருளோட தன்மையை மாத்துறது... அதாவது தவளையோட மரபணுவை எடுத்து தக்காளி செலுத்தப் போறீங்களாமே...

எசமான்... எஙக பக்கத்து வீட்டு காரங்க கோழியே சாப்பிட மாட்டங்கங்கய்யா... இனி அவுங்களும் பூனை கண்ணனுங்க மாதிரி தவளையை சாப்பிடபோறாங்க... ஆனா தக்காளி வடிவத்துல....!!!

(பின்குறிப்பு : ஏதொ ஆர்வ கோளாறுல இதை எழுதிட்டேன்... தயவு செஞ்சு என்னைக் கைது பண்ணிறாதீங்க எசமான்...!!!)

சிறப்பு பொருளாதார மண்டலம், ரோடு போட போறோம், மயிரை பிடுங்கப் போறோம்... countryயோட development… அது இதுன்னு சொல்லி நம்மக் கிட்ட உள்ள எல்லாத்தையும் பிடுங்கிட்டான்... விதை உரிமை நம்மகிட்ட இல்லை....
புடுங்கிங்க... என் ரோட்ல நான் வண்டி ஓட்டுறத்துக்கு பணம் புடுங்கிறாங்க... இது எப்படி இருக்குன்னா...பொண்டாட்டியை காசுக் கொடுத்து புணருவது மாதிரி இருக்கு...

எதை பத்தியும் நாம் கவலைப்பட மாட்டோம்... அப்படியே கவலை வந்தாலும் நமக்காக நம்ம பாசதலைவன் டாஸ்மாக்கை திறந்து வச்சுருக்கான் அப்பையும் கவலை போகலைன்னா... நம்ம தலைவனோட குடும்பமே நம்ம கவலையை தீர்க்க சேவை மனப்பான்மையில சிரிப்பொலி,ஆதித்யா, மானாட மயிராட... மன்னிசுக்கங்க மயிலாடன்னு புரோகிராம்மு நடதிக்கிட்டி இருக்கு...

முன்னாடியெல்லாம்... நல்ல உப்பை தின்னு சூடு சொரணையோட இருந்தோம்... இப்ப tata saltஐ சாப்பிடுறோம்... அதான் நக்கி பிழைக்க்கூட தயாரா இருக்கோம்...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்