Tuesday, March 30, 2010

“ அங்காடி தெரு ” திரைப்படமும், நமது கடமையும்...!

வழக்கமானதொரு மாலைப் பொழுதில் அங்காடி தெரு திரைப்படத்திற்கு நண்பர் அழைத்த போது, திரைப்படத்தின் இயக்குனரான வசந்த பாலனுடைய முந்தைய படமான “வெயில்” பார்த்துவிட்டு தொலைபேசியில் அவருடன் தர்க்கம் செய்தது நினைவுக்கு வந்தது.( எங்க அப்பா தேவர் இனத்துக்கே உரிய வீரமும், கோபமும் உள்ளவர், வெயில் படத்தின் ஆரம்ப காட்சியில் உள்ள இந்த வசனத்திற்காக தான் அவருடன் வாதம் செய்தேன்).

படத்தின் மீது பெரிதாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்கு வழக்கமான கால் மணி நேர கால தாமதத்துடன் சென்றேன். ஆனால் திரையரங்கிற்குள் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே அதில் கூறப்பட்டுள்ள அரசியல் என் பொட்டில் அடித்தாற் போல் இருந்தது.

கதையின் களம், சென்னை தி.நகரில் உள்ள அங்காடி தெரு(ரெங்கநாதன் தெரு)…

“எடுத்துக்கோ... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ...” என்று நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து கூவி அழைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடையில் தான் கதையின் நாயகனும், நாயகியும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், பெண்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் வசந்தபாலன் காட்சி மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

சரவணா ஸ்டோர்ஸ், போதீஸ் ஆகிய கடைகளில் (திரைப்படத்தில் முருகன் ஸ்டோர்ஸ்) வேலை பார்க்கும் ஊழியர்கள் கோழி பண்ணைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளை போல் அறைகளில் அடைக்கப்பட்டிருகிறார்கள்.

காதல் பூ போன்றது, புழு போன்றது என்று பேத்தும் நகர மனிதர்களின் காதல்களை மட்டும் பதிவு செய்யும் திரைப்படங்கள் மத்தியில்… இந்த படம் சராசரி பெரும்பான்மை மனிதர்களின் காதலை பதிவு செய்கிறது.

அவர்களின் அழுகை சத்தம் நகர பேரிரைச்சலில் கரைந்துப் போகிறது. அவர்களின் காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது, அவர்களின் உணர்வுகள் உதாசீனப்படுத்தப்படுகிறது.

நிச்சயம் இந்த படம் புனைவு அல்ல… நிஜம்…

சரவணா ஸ்டோர்ஸிலும், ஆயிரம் ஊழியர்கள் உங்களை வரவேற்பார்கள் என்று பெருமை அடிக்கும் போத்தீஸ் போன்ற் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் இதை விட உருக்கமான ஆயிரம் கதைகளை கேட்கலாம்.

முதலாளிகள், தம் ஊழியர்களை சக மனிதனாக பார்க்க மறுக்கிறார்கள், சக மனிதனாக பார்க்கவும் விரும்புவதில்லை. அவர்களை பொறுத்த வரை ஊழியர்கள் இயந்திரத்தை போன்றவர்கள்.

வழக்கமாக படங்களை அழுதும், சிரித்தும் பார்த்து விட்டு, வீடுகளுக்கு சென்றவுடன் படத்தின் நினைவுகளை துடைத்தெறிந்துவிட்டு நம் அன்றாட வேலைகளில் மூழ்கிபோவது போல் இந்த படத்தையும் கடந்து செல்ல வேண்டாம்.

இந்த படம் தொடர்பாக நமக்கென்று ஒரு முக்கிய கடமை இருக்கிறது...

இந்த ஊழியர்களின் அவலங்களுக்கு... நாமும் ஒரு காரணம்...

நம் மனதின் ஓரத்தில் எங்காவது கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கொடிருந்தால்... இனி சென்னை சில்க்ஸ், போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெருங் கடைகளில் எதுவும் வாங்க மாட்டோம் என்றொரு முடிவெடுப்போம்...


“நீங்கள் செருப்பை பார்கையில்
அணிந்திருப்பவனின் காலை பார்கிறீர்கள்
நான்
செய்தவனின் கையை பார்கிறேன்”

- காசி. ஆனந்தன்.

பி.கு :

இந்த படத்தின் ஒரு கூறை மட்டும் தான் இந்த கட்டுரை பேசுகிறது. அதையும் கடந்து படத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது. கண்டிப்பாக திரைப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்கவும்.

2 comments:

  1. சரியாக சொல்லியிருக்கிறாய் தம்பி.... நான் சென்ற வருடம் இதே மார்ச் மாதம் இது போன்று கடைகளில் வேலை பார்க்கும் பெண்களைப் பார்த்து அவர்களின் நிலையை பேட்டி எடுத்து எழுதியிருக்கிறேன்.. சினிமாவில் பார்ப்பதைவிட அவர்களின் கதை இன்னும் கொடுமையாக இருந்தது..

    ReplyDelete
  2. congrats nanba...indha madhiri unmaiyana seidhigalai appodhavadhu than padika mudikiradahu...

    Pramila

    ReplyDelete