Thursday, March 4, 2010

தயவு கூர்ந்து தள்ளி நில்... உன் மீது இரத்த வாடை அடிக்கிறது...!

நண்பா...! தயவு செய்து என் அருகே வராதே... என் மீது இரத்த வாடை அடிக்கிறது...
நீ முகம் சுழிக்கும் முன் நானே சொல்லிவிட்டேன்... தள்ளியே நில்...!

காரணங்கள் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதே... என் காரணங்கள் உனக்கு புரிய போவதில்லை, நீ அதை புரிந்து கொள்வதையும் விரும்புவதில்லை...
ஏனெனில் உன் மீதும் அதே இரத்த வாடை அடிக்கிறது...

நண்பா... எனக்கு மனம் பேதலித்துவிட்டது என்று நம் அறை நண்பர்களிடம் நீ சொன்னாதாக ஒரு தகவல் வந்தது... உண்மையா நண்பா...? என் மீது உள்ள அக்கறையில் என் வீட்டிற்கும் மின்னஞ்சல் அனுப்பினாயாமே...? என் நடவடிக்கை சரியில்லை என்று...!

அன்று நம் இருவருக்குமான விடுப்பு நாளில்... ஒரு உயர்தர காப்பி ஷாப்பிற்கு என்னை அழைத்து சென்றாய்... எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... உன் டி-சர்ட்டில் சேகுவேரா படம் பதிந்திருந்தது...

அன்று உன் ஆங்கிலத்தில் நீ ஏதேதோ சொன்னாய்...!
அதன் சாரம் எனக்கு மனநிலை சரியில்லை என்பதும்... நான் நல்ல மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதும்...! உன் ஆலோசனைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியாகத் தான் என்னிடம் கேட்டாய்... என் பிரச்சனை என்னவென்று...?

“சத்தியமாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நண்பா...! உனக்கு எது என்னிடம் தவறாக தெரிந்தது...? அன்று நம் அறையில் இருந்த அனைத்து levis, gap டி-சர்டையும், nike, reebok சூவையும் தீயிட்டு கொளுத்தியதா...?” என்றேன்.

நீ, ‘ஆம்’ என்றாய்...!

“நண்பா...! இந்த பொருட்களை தயாரிக்கும் ஆலைகளில் வேலை செய்வோருக்கான ஊதியம் நாளொன்றுக்கு 60 ரூபாய் மட்டும் தான்... இந்த பொருட்களை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள் 10 x 10 அளவுக் கொண்ட அறையில் குறைந்தது 10 பேர் தங்குகிறார்கள் நண்பா... அங்கு வேலை செய்யும் பெண்கள் மாத விடாய் காலத்தில் napkin வாங்குவதுகூட அவர்களுக்கு ஆடம்பரச் செலவு நண்பா...! இந்த நிறுவனங்கள் அவர்களுக்கான ஆலைகளை, அவர்களுடைய நாட்டில் நிறுவுவது இல்லை... அவர்கள் மூன்றாம் உலக நாடுகளிலேயே ஆலைகளை நிறுவுகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்... வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் நண்பா... அவர்கள் வாழும் வாழ்கையை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது...
தொழிலாளர்கள் மட்டும் சுரண்டப்படவில்லை நண்பா... இந்த நிறுவனஙகளுக்காக பொருட்களை தயாரிக்கும் ஆலைகளின் அதிபர்களும் சுரண்டப்படுகிறார்கள்... குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து தரும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள் நண்பா... நம்முடைய நீர்நிலைகள் மாசடைகிறது...!

நம் ஆலை ஊழியர்களின், ஆலை அதிபர்களின், இயற்கை அன்னையின் இரத்தத்தை உறிஞ்சி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது நண்பா... அதில் இரத்த வாடை அடிகிறது
அதனால் தான் அதனை கொளுத்தினேன்... நீயும் இனி அந்த பொருட்களை வாங்காதே... அணியாதே நண்பா...!” என்றேன்.

நீ மெளனம் காத்தாய்... சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் கிளம்பினோம்...

அத்யாவசிய தேவை என்று நீ நினைத்து வங்கியில் கடன்பெற்று நீ வாங்கிய உன்னுடைய கார், நம் இருவரை மட்டும் சுமந்துச் சென்றது...

நண்பா...! இது நம் mansion செல்லும் வழியில்லையே... நாம் எங்கு செல்கிறோம் என்று வினவினேன்.

நீ பதிலேதும் கூறவில்லை...
சில கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு ஒரு புகழ் பெற்ற மனநல மருத்துவரின் கிளினிக்கில் காரை நிறுத்தினாய்...

தெளிவாக எனக்கு எல்லாம் புரிகிறது நண்பா...!
ஆனால் உனக்குதான் நான் முன்பே கூறியது போல் எதுவும் புரிவதில்லை. புரிந்துக் கொள்வதையும் நீ விரும்புவதில்லை...!

இறுதியாக உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள் நண்பா...! தயவுசெய்து இனி சேவின் படம் போட்ட டி-சர்டை நீ எப்போதும் அணியாதே...!

எனக்கு இந்த மனநல மருத்துவர் மீது இரத்த வாடை அடிக்கிறது...!

3 comments:

  1. கருத்தாழமிக்க பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதை படித்து, யாராவது திருந்தினால் சரி... ஆனா அந்த நம்பிக்கை இல்லையே? அது சரி.. மான அவமானம் கெட்டு வாழும் மனிதர்கள் மீது நம்பிக்கை எப்படி வரும்?

    ReplyDelete
  3. விருத்திரன் சூப்பரா இருக்கு. பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete